இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இரத்தினபுரி, பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 11-11-2019 | 6:50 PM
Colombo (News 1st) இரத்தினபுரி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொட, தம்புள்ளை, வெலிகேபொல பகுதிகளுக்கும் கொழும்பு - பதுளை பிரதான வீதியின் பம்பஹின்ன - பலாங்கொடை வீதியிலும் மண்மேடு சரிந்து விழும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாளை (12) பிற்பகல் 3 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அந்தப் பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.