Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரப்புரைக் கூட்டங்கள் புத்தளம், கண்டி மற்றும் குருணாகல் ஆகிய இடங்களில் இன்று (11) நடைபெற்றன.
புத்தளம் நகரில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பை, புத்தளம் தொகுதி அமைப்பாளர் சிந்தக அமல் மாயாதுன்ன ஏற்பாடு செய்திருந்தார்.
கோட்டாபய ராஜபக்ஸவுடன், மஹிந்த ராஜபக்ஸவும் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
நான் தனிப்பட்ட ரீதியில் சீனாவிற்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள முகாமைத்துவம் தொடர்பில் அறிந்துகொள்வதற்குச் சென்றேன். கழிவுகளை எரிப்பது மற்றும் எம்மைப் போன்ற நாடுகளில் நீர் அதிகமுள்ள கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் முறை தொடர்பில் நான் அங்கு பார்வையிட்டேன். அங்கு தற்போது தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. கழிவுகளூடாக உரத்தை உற்பத்தி செய்தல் மற்றும் அவற்றை எரிப்பதால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. ஆகவே, கழிவுகளை ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்குக் கொண்டு செல்லாமல், அந்த இடங்களில் வைத்தே கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் தொழில்நுட்பம் இன்று உலகிலுள்ளது என்பதை நாம் அறிவோம். இன்று அனைத்து மாகாணங்களிலும் இந்தப் பிரச்சினை காணப்படுகின்றது. நகரமாக இருந்தாலும் சிறிய நகரமாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் கழிவுகளை அழிக்கும் முறைமை தொடர்பில் பிரச்சினையுள்ளது. பிரதேச சபைகள், நகர சபைகள் ஊடாக அந்தந்தப் பிரதேங்களின் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கும் அந்தந்தப் பகுதி மக்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் அதனை முன்பெடுப்பதற்கு இன்று தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. நாம் அந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இவர்கள் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை நிறுத்தி உங்களின் கழிவகற்றல் பிரச்சினைக்கு நாம் தீர்வு காண்போம் என நான் உறுதியளிக்கின்றேன்
என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.