வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக கோட்டாபய ராஜபக்ஸ நுவரெலியாவில் வாக்குறுதி
by Staff Writer 09-11-2019 | 8:44 PM
Colombo (News 1st) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் பிரசாரக் கூட்டம் இன்று நுவரெலியாவில் நடைபெற்றது.
நுவரெலியா வெளித்திடலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஸவும் கலந்துகொண்டிருந்தார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, மாடி வீடுகளை அமைக்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி மாதாந்தம் இலகுவான முறையில் கட்டணம் செலுத்தி, குறைந்த வட்டி வீதத்தில் எவ்வாறு மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றியை உறுதி செய்யும் மற்றுமொரு கூட்டம் நேற்று (08) பிற்பகல் ஹெட்டிப்பொலயில் நடைபெற்றது.
ஹெட்டிப்பொல நகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.
இந்தக் கூட்டத்தில், பல வருடங்களாக நாட்டின் புத்திஜீவிகள், வர்த்தகர்கள், முயற்சியாளர்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளை அடையாளம் கண்ட பின்னரே அதற்கு தீர்வு வழங்கும் வகையில், தமது விஞ்ஞாபனத்தை வெளியிட்டதாக கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
மேலும், விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் தனது பதவிக்காலத்தில் நிறைவேற்றுவதாக கோட்டாபய ராஜபக்ஸ வாக்குறுதியளித்தார்.