ஹெம்மாத்தகம பொலிஸார் மூவர் பணி நீக்கம்

மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி பாலியல் துஷ்பிரயோகம்: விசாரணை மேற்கொள்ளாத பொலிஸார் மூவர் பணி நீக்கம்

by Staff Writer 09-11-2019 | 3:28 PM
Colombo (News 1st) ஹெம்மாத்தகம பொலிஸ் நிலையத்தின் மூன்று உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கிடைத்த முறைப்பாடு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படாமையால் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும், இரண்டு பொலிஸ் கான்ஸ்ரபிள்களும் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய, கேகாலை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரூடாக இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். கேகாலையில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்புகையில் குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.