பல்கலைக்கழகங்களுக்கான நிதி பயன்படுத்தப்படவில்லை

பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 7083 மில்லியன் ரூபா பயன்படுத்தப்படவில்லை என தகவல்

by Staff Writer 09-11-2019 | 6:28 PM
Colombo (News 1st) பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 7083 மில்லியன் ரூபா நிதி நாட்டிலுள்ள 15 பல்கலைக்கழகங்களால் பயன்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது. கோப் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளினூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது. அரசாங்கத்தினூடாக நாட்டிலுள்ள 15 பல்கலைக்கழகங்களுக்காகவும் வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியில் ஒரு தொகை நிதி பயன்படுத்தப்படாமல் 794 வங்கி கணக்குகளூடாக நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கோப் குழுவினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தியினால் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 15 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோப் குழுவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களுக்கான வருடாந்த மூலதன செலவுகளுடன் தொடர்புடைய விடயங்களுக்காக பயன்படுத்தப்படாமல் குறித்த தொகை தக்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 1416 மில்லியன் ரூபா நிதி தக்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கோப் குழுவின் நான்காவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.