நீதியை மதிக்கும் யுகத்தை உருவாக்குவோம்: மட்டக்களப்பில் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

by Staff Writer 09-11-2019 | 8:19 PM
Colombo (News 1st) இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அன்னச் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று கிழக்கு மாகாணங்களில் பரப்புரைக் கூட்டங்களில் கலந்துகொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய சஜித் பிரேமதாச,
இனவாதம், மதவாதத்தைப் பரப்புமாறு புத்தபெருமான் ஒருநாளும் போதித்ததில்லை. அவ்வாறு குழுவொன்று செயற்படுகையில், அவர்கள் பௌத்தர்கள் அல்ல என்றே நான் கூறுகின்றேன். ஆகவே, பௌத்த கொள்கைகளூடாக நான் பெளத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவேன். பெளத்தத்தைப் பாதுகாக்கும் அதேவேளை, அனைத்து மதத்தவர்களும், அனைத்து இனத்தவர்களும் இந்நாட்டிற்குள் வாழும் அனைத்து மக்கள் பிரிவினரும் இன, மத வேறுபாடுகள் இன்றி வாழ்வதற்காக, இனவாதம், மதவாதத்தை முழுமையாக ஒழித்து, நீதியை மதிக்கும் யுகத்தை 16ஆம் திகதி பெறும் வெற்றியுடன் நடைமுறைப்படுத்துவோம்
என குறிப்பிட்டார். ஓட்டமாவடி பிரசாரக் கூட்டத்தின் பின்னர் சஜித் பிரேமதாச, களுதாவளை விளையாட்டு மைதானத்திற்கு சென்றார். இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட மற்றுமொரு கூட்டம் நேற்றிரவு அம்பாறையில் நடைபெற்றது. அம்பாறை நகரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தயாகமகே, விஜயமுனி சொய்சா, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, கரும்பு செய்கையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சஜித் பிரேமதாச கவனம் செலுத்தினார். மேலும், கல் ஓயா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான காணியில் நீண்டகாலமாக வசிக்கின்ற காணி உறுதிப்பத்திரமற்றவர்களுக்கு மூன்று மாதத்திற்குள் காணி உறுதிப்பத்திரத்தினை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி வழங்கினார்.