ட்ரம்பிற்கு 2 மில்லியன் டொலர்கள் அபராதம்

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2 மில்லியன் டொலர்கள் அபராதம்

by Bella Dalima 09-11-2019 | 5:07 PM
Colombo (News 1st) அறக்கட்டளை நிதியை தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்திய ட்ரம்பிற்கு 2 மில்லியன் டொலர்களை அபராதமாக விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் Donald J. Trump Foundation என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது இந்த அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தனது தேர்தல் செலவுகளுக்கு ட்ரம்ப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நியூயார்க் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இது அரசியல் ரீதியிலான பழிவாங்கல் நடவடிக்கை என்றும், எதிர்க்கட்சியினரால் சோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்றும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். எனினும், இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு Donald J. Trump Foundation அறக்கட்டளை மூடப்பட்டது. இந்த நிலையில், நியூயார்க் நீதிமன்றில் பெண் நீதிபதி சாலியன் ஸ்கார்புல்லா முன்னிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது நிதி மோசடி தொடர்பான ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கில் ட்ரம்பிற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், ட்ரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத 8 தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.