மற்றுமொரு கொடுக்கல் வாங்கலை அம்பலப்படுத்தினார் சஜின் வாஸ்

மற்றுமொரு கொடுக்கல் வாங்கலை அம்பலப்படுத்தினார் சஜின் வாஸ்

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2019 | 7:55 pm

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன அம்பலாங்கொடையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மற்றுமொரு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடயங்களை வௌிப்படுத்தினார்.

அவர் தெரிவித்ததாவது,

ஷங்ரிலா ஹோட்டல் அமைந்துள்ள இடத்தில் இராணுவத் தலைமையகம் முன்னர் காணப்பட்டது. இந்த கொடுக்கல் வாங்கலில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் என்னிடமுள்ள இந்த சத்தியக்கடதாசியிலுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த சிதம்பரம் என்ற நபரே இந்த சத்தியக்கடதாசியை வெளியிட்டுள்ளார். TPL-Inter என்ற நிறுவனத்தை சேர்ந்தவர். TPL என்ற நிறுவனமும், ஷங்ரிலாவுடன் தொடர்புடைய ஹெலியாட் என்ற நிறுவனமும் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. ஷங்ரிலா ஹோட்டல் திட்டம் தொடர்பில் ஆலோசனை சேவைகளை வழங்குவதே இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கமாகும். இந்த நிறுவனத்தின் பணிப்பாளர், பங்குதாரர் மற்றும் உரிமையாளர் ஆகியோரே இந்த சத்தியக் கடதாசியை வழங்கியுள்ளனர். இந்தக் கொடுக்கல் வாங்கலுக்காக 5 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டதாக இதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூபாவில் குறிப்பிடுவதாக இருந்தால் சுமார் 100 கோடி ரூபாவாகும். இதுவே பெறப்பட்ட இலஞ்சம் அல்லது தரகுப்பணம். இந்தப் பணத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தங்காலையில் டங்கோல்பே ஹோட்டலை கொள்வனவு செய்வதற்கும், CSN தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளது. ஹெலியாட் எனப்படும் நிறுவனத்தினால் இந்தத் திட்டத்திற்காக 5 மில்லியன் டொலர் தரகுப்பணமாக வழங்கப்பட்டுள்ளது என்பது இதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

என சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டார்.

இந்தப் பணம் ஹெலியாட் எனப்படும் நிறுவனத்தினால் ஷங்ரிலா நிறுவனத்திற்காக அவர்களின் கணக்கு இலக்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் சிதம்பரம் கூறியதாகவும் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்தார்.

குறித்த 5 மில்லியன் டொலர் பணம் நாமல் ராஜபக்ஸ மற்றும் யோஷித ராஜபக்ஸ ஆகியோருக்காக என்தெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கும், கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வர்க் எனப்படும் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டதாக சத்தியக்கடதாசியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சஜின் வாஸ் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயத்தில் தாம் இணைப்பாளராக செயற்பட்டதன் காரணமாக அதற்கான ஆவணம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்