ஹிஸ்புல்லா அல்லது பிரிவினைவாதிகளுக்கு ஒத்துழைப்போரின் வாக்குகள் தேவை இல்லை: விமல் வீரவன்ச கருத்து

ஹிஸ்புல்லா அல்லது பிரிவினைவாதிகளுக்கு ஒத்துழைப்போரின் வாக்குகள் தேவை இல்லை: விமல் வீரவன்ச கருத்து

எழுத்தாளர் Bella Dalima

08 Nov, 2019 | 8:24 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பொலன்னறுவையில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லா தொடர்பில் கருத்து வௌியிட்டார்.

எமது வெற்றிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொள்ள அவர்கள் தயாராகியுள்ளனர். முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் ஊடாக, இரண்டாவது விருப்பு வாக்கை கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வழங்க வேண்டும் என எவ்வாறேனும் அவர்களுக்கு கூற வைக்க வேண்டும். இந்த நாட்டில் பிரிவினைவாதத்துடன் தொடர்புடைய சஹ்ரான் போன்றவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய எந்தவொரு அரசியல்வாதியினதும் ஆதரவை நாம் எதிர்பார்க்கவில்லை

என விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

மேலும், எதிர்காலத்தில் ஏதேனும் திட்டமொன்றின் கீழ், முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா அல்லது பிரிவினைவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதியொருவர் அல்லது அவர்களின் இயல்புடைய ஒருவரின் ஊடாக, இரண்டாவது விருப்பு வாக்கு அல்லது வாக்கினை கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வழங்குமாறு ஏதேனும் காணொளி வௌியிடப்பட்டால் அல்லது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டால், அது தம் மீதான திட்டமிட்ட சூழ்ச்சியின் பெறுபேறே தவிர, தமது தேவைக்காக இடம்பெற்றவொரு விடயம் அல்ல என விமல் வீரவன்ச கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்