மன்னார் மாவட்டத்தை சொர்க்க பூமியாக மாற்றுவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி

மன்னார் மாவட்டத்தை சொர்க்க பூமியாக மாற்றுவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி

எழுத்தாளர் Bella Dalima

08 Nov, 2019 | 7:35 pm

Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் பிரசாரக் கூட்டங்கள் சில இன்று வட மாகாணத்தில் இடம்பெற்றன.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த பிரசாரக் கூட்டத்தில், நாட்டிற்குள் மீண்டும் பயங்கரவாதம் இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அபிவிருத்தி மற்றும் தனது கொள்கைகள் தொடர்பிலும் சஜித் பிரேமதாச கருத்து தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

வில்பத்து காட்டிற்கு எவ்வித பாதிப்புமின்றி, சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், யாழ்ப்பாணம் மற்றும் புத்தளத்தை இணைக்கும் மாற்று வீதியொன்றை நாம் நிர்மாணிப்போம் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றேன். மீனவ சமூகத்தினர் எவ்வித பிரச்சினையுமின்றி தமது தொழிலில் ஈடுபடுவதற்கான உபகரணங்கள், நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். கரையோரத்தில் இருந்து 200 கடல் மைல் தொலைவு கடற்பகுதி எமது நாட்டிற்கு உரித்தானது. இதுவரை காலமும் அதன் ஊடாக நாம் பயனைப்பெறவில்லை. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கடல் வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மீன்பிடித்துறையை நாம் கட்டியெழுப்புவோம். அது மாத்திரமின்றி, மீன்பிடி உபகரணங்கள், நிவாரணங்களையும் வழங்குவோம். அத்துடன், கடற்கரையில் இருந்து 200 கடல் மைல் தூரத்தை, மீன்பிடி மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்காக நாம் கட்டாயமாக வழங்குவோம். மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தியின் சொர்க்க பூமியாக நான் மாற்றுவேன். மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்றன. இந்த 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பாரிய திட்டங்களை நாம் ஆரம்பிப்போம். அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தொழில் பேட்டைகளை ஆரம்பிப்போம். இளையோர் சமூகத்திற்கு எப்போதும் கிடைக்காத வரலாற்று ரீதியான சக்தியை இந்த மாவட்டத்தில் நாம் வழங்குவோம்.

என குறிப்பிட்டார்.

இந்த பிரசாரக் கூட்டத்தை அடுத்து, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோவை ஆயர் இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கலந்து கொண்டிருந்தார்.

அதன் பின்னர் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான திருக்கேதீச்சர ஆலயத்தின் கட்டுமானப் பணிகளை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பார்வையிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்