ஶ்ரீ சங்கபோ மன்னன் கொலை செய்யப்பட்ட பின்னர் கோட்டாபய மன்னரானதை சஜித் அறிந்திருக்க மாட்டார்: மஹிந்த ராஜபக்ஸ

by Bella Dalima 07-11-2019 | 8:28 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரசாரக் கூட்டம் பதுரலியவில் நேற்று (06) இடம்பெற்றது. பதுரலிய பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த பிரசாரக் கூட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஏற்பாடு செய்திருந்தார். மஹிந்த ராஜபக்ஸவுடன் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த பிரசாரக்கூட்டத்தில், கிராமிய அபிவிருத்தி தொடர்பில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார். இதேவேளை, இந்த கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ,
இரண்டு மேடைகளுள்ளன. ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மேடை. மற்றையது எமது மேடை. எமது மேடையிலுள்ள வேட்பாளர் அவரின் கொள்கை மற்றும் இலக்கு தொடர்பில் பேசுகின்றார். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முறை தொடர்பில் பேசுகின்றார். அவரின் மேடையில் தான் ஶ்ரீ சங்கபோ மன்னனாக மாறுவது தொடர்பில் பேசுகின்றார். எனினும், ஶ்ரீ சங்கபோ மன்னன் கொலை செய்யப்பட்ட பின்னர், கோட்டாபய மன்னரானமையை அவர் அறிந்திருக்க மாட்டார்
என குறிப்பிட்டார். இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் மற்றுமொரு கூட்டம் இன்று பிற்பகல் கேகாலையில் நடைபெற்றது. கேகாலை மக்கள் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அமோக வரவேற்பளித்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஸ, தரமான கல்வியும் வேலைவாய்ப்பும் இல்லாமையால் நாட்டின் இளைஞர், யுவதிகள் பாரிய அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டம் தம்மிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.