தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித்திற்கு ஆதரவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித்திற்கு ஆதரவு

by Staff Writer 07-11-2019 | 2:00 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாகக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் அவர்களின் கடந்த கால செயற்பாடுகளை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதான வேட்பாளர்களான, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் கடந்த கால செயற்பாடுகளை கருத்திற்கொண்டு பொருத்தமான கணிப்பொன்றை மேற்கொண்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுன மற்றும் அதன் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அவருடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் கடந்த கால செயற்பாடுகள் கவலையளிப்பதாகவும் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை நீக்கி 18 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியமை, பாராளுமன்றத்தை ஆட்டிப்படைத்தமை, அரசியலமைப்புப் பேரவையை இல்லாதொழித்தமை, சேவைத்துறைகள் மற்றும் நீதித்துறைக்கான உயர் நியமனங்களை முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய மேற்கொண்டமை, பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஜனாதிபதி எத்தனை தடவையும் பதவியில் தொடர்ந்தும் இருப்பதற்கு உதவும் வண்ணம் அரசியலமைப்பைத் திருத்தியமைத்தமை என்பன கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் சர்வாதிகார ஆட்சியை தொடர்வதற்கான திடசங்கற்பத்தை ஏற்படுத்தியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அரசியலமைப்பிற்கு முரணாக அவர்கள் பாராளுமன்றத்தில் செயற்பட்டபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாது ஜனநாயகத்திற்காக பாராளுமன்றத்தில் உறுதியாக நின்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகளுக்கும் காணாமற்போதல் சம்பவங்களுக்கும் நாட்டில் வௌ்ளை வேன் அச்சம் நிலவியமையும் மக்களுக்கு நினைவில் இருக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கியும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கும் பேச்சுவார்த்தையை ராஜபக்ஸ அரசு கைவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை அந்த அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர் சார்நத அரசியல் இயக்கமும் அத்தகைய முறைப்பாட்டிற்கு இடமளிக்கவில்லை என கூட்டமைப்பு கூறியுள்ளது.