பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்பவரே பிரதமர்: சஜித் பிரேமதாச வாக்குறுதி

பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்பவரே பிரதமர்: சஜித் பிரேமதாச வாக்குறுதி

எழுத்தாளர் Bella Dalima

07 Nov, 2019 | 3:57 pm

Colombo (News 1st) தாம் ஜனாதிபதியாக தெரிவாகியவுடன் பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் நபரை, புதிய பிரதமராக நியமிப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று அவர் ஆற்றிய விசேட உரையின் போதே இந்த விடயத்தைக் கூறினார்.

மேலும், தமது அமைச்சரவையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்தார்.

இயலுமானவரை விரைவாக பொதுத்தேர்தலை நடத்தி, ஸ்திரமான புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

தேசியப்பட்டியலில் தொழில் வல்லுநர்கள் மற்றும் பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி புதிய முன்மாதிரியை உருவாக்குவதாகவும் பொதுத்தேர்தல் மற்றும் அதன் பின்னரான மாகாண சபைத் தேர்தலில் இளைஞர், யுவதிகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

பழைய ஊழல்மிகு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அத்துடன், பயமுறுத்தல் மற்றும் வன்முறையூடாக அதிகாரத்தைக் கோரும் சர்வாதிகார அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவை அனைத்தினதும் பின்புலத்திலுள்ள சக்திகளுக்கும் தீர்மானம் மிக்க ரீதியில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கை, பூகோள ரீதியில் பெறுமதி மிக்க நாடாகும். இலங்கை வளங்கள் நிறைந்த நாடாகும். இலங்கை, திறமை மற்றும் நிபுணத்துவத்தால் நிறைந்த மனித வளத்தைக் கொண்ட நாடாகும். சிறிய குழுவிற்கு இந்த அழகான நாட்டைக் கொடுக்காது, நிபுணத்துவத்திற்கு, திறமைக்கு முன்னுரிமை வழங்கி, பாதுகாப்பான ஒழுக்கத்தை மதிக்கும், சுதந்திரமான சமூகத்தைக் கொண்ட நாடாக இதனை மாற்ற வேண்டும் என சஜித் பிரேமதாச தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்தில் பாராளுமன்றத்துடன் மாத்திரம் மட்டுப்படாமல் மக்களிடையே சென்று, அரசியலமைப்பிற்கு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, அனைத்து மக்கள் பிரிவினருக்கும் தாம் இலங்கையின் பிரஜை என்ற எண்ணம் தோன்றும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் மிகப்பெரும் கைங்கரியத்தை பாராளுமன்றத்திற்குள்ளும் மக்களிடையேயும் ஏற்படுத்த நேர்மையுடன் செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்