கினிகத்ஹெனயில் துப்பாக்கிச்சூடு: S.B. திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவு கான்ஸ்டபிள்கள் இருவர் கைது

கினிகத்ஹெனயில் துப்பாக்கிச்சூடு: S.B. திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவு கான்ஸ்டபிள்கள் இருவர் கைது

கினிகத்ஹெனயில் துப்பாக்கிச்சூடு: S.B. திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவு கான்ஸ்டபிள்கள் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2019 | 7:39 am

Colombo (News 1st) கினிகத்ஹேன – பொல்பிட்டிய பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் S.B. திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்த 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் இருவரும் கரவனெல்ல மற்றும் கினிகத்ஹேன வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் S.B. திசாநாயக்கவின் வாகனம் வழிமறிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின்போது அவரது பாதுகாவலர்கள் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியிலிருந்து 3 வெற்றுத் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் அடையாள அணிவகுப்பிற்காக இன்று (07) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் S.B. திசாநாயக்கவின் பாதுகாவலர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் கவலையடைவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் நிரூபிக்கப்படுமாயின், குறித்த பிரிவினர் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என தாம் நம்புவதாக கோட்டாபய ராஜபக்ஸ தமது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்