உடுதும்பர தேரரின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

MCC ஒப்பந்தத்திற்கு எதிரான உடுதும்பர காஷ்யப்ப தேரரின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

by Staff Writer 06-11-2019 | 7:41 AM
Colombo (News 1st) அமெரிக்காவுடன் கைச்சாத்திடவுள்ள MCC ஒப்பந்தம் எக்காரணத்திற்காகவும் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் கைச்சாத்திடப்பட மாட்டாது என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குறித்த ஒப்பந்தத்திற்கு எதிராகக் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட உடுதும்பர காஷ்யப்ப தேரருக்கு வழங்கிய கடிதத்தின் மூலம் இதனை அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் அல்லது அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படுமாயின், பாராளுமன்றம் மற்றும் அதற்கு வௌியே விவாதம் நடத்தப்பட்டே கைச்சாத்திடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் தாம் இணங்கப்போவதில்லை எனவும் சஜித் பிரேமதாச கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மகா சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனைகளை பெற்ற பின்னரே ஒப்பந்தம் தொடர்பில் எதிர்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சஜித் பிரேமதாச, உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட உடுதும்பர காஷ்யப்ப தேரருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், MCC ஒப்பந்தத்திற்கு எதிராக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தொடர் உண்ணாவிரதத்தை முன்னெடுத்த உடுதும்பர காஷ்யப்ப தேரர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார்.