MCC ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்கு நீதியரசர்கள் குழாத்தை நியமிக்குமாறு கோரிக்கை 

by Staff Writer 06-11-2019 | 2:04 PM
Colombo (News 1st) MCC எனப்படும் Millennium Challenge Corporation உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை விசாரணை செய்வதற்கு முழுமையான நீதியரசர்கள் குழாத்தை நியமிக்குமாறு மனுதாரர்கள் தரப்பு, உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. அஹூன்கல்லே ஜினானந்த தேரர் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புவனேக அலுவிஹாரே மற்றும் S. துரைராஜா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில், மனுக்கள் இன்று (06) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த உடன்படிக்கை நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கை என மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக குறித்த மனுக்களை விசாரணை செய்வதற்காக முழுமையான நீதியரசர்கள் குழாத்தை நியமிக்க வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார். இதன் பிரகாரம் இந்த வழக்குக் கோவையை பிரதம நீதியரசரிடம் சமர்ப்பிக்க நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி குறித்த மனுக்கள் மீண்டும் பரிசீலிக்கப்படவுள்ளன.