Laugfs நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்

Laugfs எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்

by Staff Writer 06-11-2019 | 1:22 PM
Colombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தைப் பட்டியலிலுள்ள Laugfs எரிவாயு நிறுவனத்தின் பங்கு விலைகளை செயற்கையான முறையில் மாற்றிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. Laugfs எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H. வேகபிட்டிய, U.K. திலக் என் டி சில்வா, தக்‌ஷில ஐ ஹுலங்கமுவ ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செயற்கையான முறையில் பங்குச்சந்தை செயற்பாடுகளை வழிநடத்துவதற்குத் திட்டம் தீட்டியமை மற்றும் Laugfs எரிவாயு பங்கு விலைகள் தொடர்பில் குறித்த குற்றத்தை புரிவதற்கு உடந்தையாக செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் பிரதிவாதிகள் குற்றவாளிகளாக காணப்பட்டால் அதிகபட்சம் ஐந்தாண்டுகள் வரை அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பதற்கான இயலுமை உள்ளது. 10 மில்லியன் ரூபா வரையான அபராதம் அல்லது சிறைத்தண்டனை மற்றும் குறித்த 2 தண்டனைகளையும் ஒரே தடவையில் விதிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. Laugfs எரிவாயு நிறுவனத்தின் தலைவர், முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பங்குமுகவர் நிறுவனத்தின் முதலீட்டு ஆலோசகர் ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மத்திய முதலீட்டு கணக்குகளைப் பயன்படுத்தி 2011 ஆண்டு ஒக்டோபர் 7 மற்றும் 10 ஆம் திகதிகளில் Laugfs எரிவாயு நிறுவனத்தின் பங்குக் கேள்வி தொடர்பிலேயே செயற்கையான முறையில் பங்குச்சந்தை நடவடிக்கைகள் வழிநடத்தப்பட்டுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய, இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.