18 வளைவுகளுக்கு பதிலாக மாற்று வீதியை நிர்மாணிப்பதாக ஹசலக்கவில் சஜித் பிரேமதாச வாக்குறுதி

by Bella Dalima 06-11-2019 | 8:32 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்ற பொதுக்கூட்டம் ஹசலக்க நகரில் நடைபெற்றது. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ரணசிங்க பிரேமதாசவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தார். பொதுக்கூட்டத்தில் லக்ஷ்மன் கிரியெல்ல, சுஜீவ சேனசிங்க, மயந்த திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, உடுதும்பர - பிட்டதுன்ன 18 வளைவுகளுக்கு பதிலாக மாற்று வீதியை நிர்மாணிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார். மீமுரே - பிட்டதுன்ன - ரத்னஎல்ல - சீதாகொடுவ பகுதியை அபிவிருத்தி வலயமாக அபிவிருத்தி செய்து, வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகளை வரவழைத்து, சுற்றுலாத்துறையை விருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச கூறினார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் பங்கேற்ற இரண்டாவது கூட்டம் கந்தகெட்டிய பகுதியில் இன்று நடைபெற்றது. மக்களின் வரவேற்பிற்கு மத்தியில் சஜித் பிரேமதாச பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் இதன்போது, வயோதிபர்களுக்கான கொடுப்பனவை 2000-இலிருந்து 3000 ரூபாவாக அதிகரித்து, அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்தார்.

ஏனைய செய்திகள்