வரலாற்றை மறந்துவிட வேண்டாம்: சுசில் பிரேமஜயந்தவிற்கு சஜின் டி வாஸ் குணவர்தன நினைவூட்டல்

by Bella Dalima 06-11-2019 | 7:46 PM
Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன இன்று மீண்டும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது, தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பான குரல் பதிவை நேற்று (05) வௌியிட்டதன் பின்னர் தனது கருத்தை முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஊடகங்கள் முன்னிலையில் நிராகரித்ததாகவும் இது குறித்து கவலையடைவதாகவும் கூறினார். மேலும், சுசில் பிரேமஜயந்தவிற்கு சஜின் டி வாஸ் குணவர்தன பின்வருமாறு பதில் வழங்கினார்.
நீங்கள் பெட்ரோலிய வளத்துறை அமைச்சராக இருந்த போது, முன்னாள் ஜனாதிபதி என்னுடன் தொடர்புகொண்டு உங்களை சந்திக்குமாறு கூறினார். நான் அன்று உங்களை சந்தித்து முன்னாள் ஜனாதிபதி கூறிய விடயங்களைக் கூறியது உங்களுக்கு நினைவு இருக்கும் அல்லவா? உங்களை இராஜினாமா செய்யுமாறு கூறியிருந்தார். அதன்போது நீங்கள் முடியாது என்று கூறினீர்கள். ஏன் நான் இராஜினாமா செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்டீர்கள். அதன்போது முன்னாள் ஜனாதிபதியிடம் வீடியோ ஒன்று இருந்தது. அந்த வீடியோவில் என்ன இருந்தது என்பது எனக்கும் உங்களுக்கும் தெரியும். உங்களது குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் அதில் தொடர்புபட்டிருப்பதால், நான் அதனை பகிரங்கமாகக் கூறவில்லை. எனினும், நான் அந்த வீடியோவை உங்களுக்கு காண்பித்ததும், உங்களுக்கு மயக்கம் வந்துவிட்டது. அதன் பின்னர் நீங்கள் இராஜினாமா கடிதத்தை வழங்கினீர்கள். அதன் பின்னரே அனுர யாப்பா பெட்ரோலிய வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். நீங்கள் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டீர்கள். இந்த வரலாற்றை மறந்துவிட வேண்டாம். இதுவே ராஜபக்ஸவின் வரலாறு. அன்று அந்த வீடியோவை உங்களுக்கு காண்பித்து, உங்களை அச்சுறுத்தினர். உங்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்றிருக்க முடியும் அல்லவா? அவ்வாறு போகவில்லையல்லவா? என்னைப் பயன்படுத்தி, அந்த வீடியோவை உங்களுக்கு காண்பித்து, உங்களை அச்சுறுத்திய பின்னரே நீங்கள் இராஜினாமா செய்து வேறு அமைச்சிற்கு சென்றீர்கள். இதுவே ராஜபக்ஸவின் முறை.