மாணிக்கக்கல் தொழிற்துறையை மேம்படுத்துவதாக நிவித்திகலயில் கோட்டாபய வாக்குறுதி

by Bella Dalima 06-11-2019 | 7:25 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இரத்தினபுரி - நிவித்திகல பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்றிருந்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிவித்திகல தொகுதி அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர இந்த பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். பொதுக்கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். இதன்போது, தமது அரசாங்கத்தின் கீழ் மாணிக்கக்கல் தொழிற்துறையை முன்னேற்றுவதற்கு முன்னுரிமை வழங்குவதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார். மேலும், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக சுத்தமான குடிநீர் திட்டத்தை உருவாக்குவதாகவும் கழிவுப்பொருட்கள் முகாமைத்துவம் தொடர்பில் முக்கியத்துவம் செலுத்தவுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ கூறினார். நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதாகவும் அவர் வாக்குறுதி வழங்கினார். இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ கலந்துகொண்ட மற்றுமொரு மக்கள் சந்திப்பு இரத்தினபுரி - கலவான நகர மத்தியில் இன்று இடம்பெற்றது. கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

ஏனைய செய்திகள்