by Staff Writer 05-11-2019 | 8:21 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு இன்று (05) சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோரின் தலைமையில் இம் மாநாடு இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ள மாநாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என அனைத்து உறுப்பினர்களிடமும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பினர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குழுவொன்று, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளதாக அறியக்கிடைத்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அதில் பங்கேற்காதிருக்குமாறும் அனைத்து ஏற்பாட்டாளர்களிடமும் கேட்டுக்கொள்வதாக தயாசிறி ஜயசேகர அறிக்கையூடாக தெரிவித்துள்ளார்.
பணத்திற்காகவும் சலுகைகளுக்காகவும் செயற்படும் இவ்வாறான குழுவினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.