RCEP ஒப்பந்தத்தில் இணையப் போவதில்லை - இந்தியா

பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் இணையப் போவதில்லை என இந்தியா தெரிவிப்பு

by Staff Writer 05-11-2019 | 9:32 AM
Colombo (News 1st) 16 நாடுகளுடனான பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் இணையப் போவதில்லை என இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் நலன்கள் குறித்து எந்தவொரு தீர்மானமும் எட்டப்படாத நிலையில், குறித்த ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இணைந்துகொள்ளாமையால் இந்திய விவசாயிகள், சிறிய மற்றும் நடுத்தர தொழிற்றுறைகள் நன்மையடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 10 தென்கிழக்காசிய நாடுகளும் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளும் இணைந்து பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன. 16 நாடுகளினதும் 3.6 பில்லியன் மக்கள் நன்மையடையும் வகையில் உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக அமைப்பாக மாற்றமடைவதே இந்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.