by Bella Dalima 05-11-2019 | 9:19 PM
Colombo (News 1st) சமஷ்டி வழங்க சஜித் பிரேமதாச தயாராவதாக பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ முன்வைத்த குற்றச்சாட்டிற்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலாத்துஓயவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பதில் வழங்கினார்.
ஒருமைப்பாடான இலங்கையை உருவாக்கும் போது ஒருமித்த இலங்கையை எதற்காகவும் வலுவிழக்க செய்யாது ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்து, நாட்டின் சுயாதீனத்தை, நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பது தனது பொறுப்பு மற்றும் கொள்கை என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஐக்கியம் என்ற வார்த்தையை தூக்கிப்பிடித்து பெடரல் என்ற போர்வையைப் போர்த்த முனைவதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
சஜித் பிரேமதாசவிடம் 'பெடரல்' (Federal) என்பது இல்லை, எப்போதும் பெடரல் ஶ்ரீலங்கா தொடர்பில் செயற்படவில்லை. ஒன்றிணைந்த, ஒருமித்த இலங்கைக்காகவே செயற்படுவதாக அவர் மேலும் கூறினார்.
திகன குண்டசாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்தார்.
இந்த மக்கள் சந்திப்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அரசியல்வாதிகள் சிலர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தமது ஆதரவை வழங்கினர்.
இதேவேளை, சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்திருந்த 100 ஆவது பொதுக்கூட்டம், மஹியங்கனையில் நேற்றிரவு நடைபெற்றது.
பெருந்திரளானோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.