தபால் மூல வாக்களிப்பு இன்றும் முன்னெடுப்பு

ஜனாதிபதித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு இன்றும் முன்னெடுப்பு

by Staff Writer 05-11-2019 | 8:31 AM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (05) இடம்பெறவுள்ளது. பொலிஸார், தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் இன்றும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் கட்டத்தின் முதல் நாளான நேற்றைய தினம் சுமூகமான முறையில் வாக்களிப்பு நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் முதற்கட்டம் கடந்த 31ஆம் திகதியும் முதலாம் திகதியும் நடைபெற்றது. குறித்த நாட்களில் வாக்களிக்கத் தவறிய வாக்காளர்கள் எதிர்வரும் 7ஆம் திகதி தாம் கடமையாற்றும் இடத்திற்கு அருகிலுள்ள மாவட்ட செயலகங்களில் தபால் மூலம் வாக்குகளை அளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் பகுதிகளில் நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனைகள் வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் எதிர்வரும் சனிக்கிழமை கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.