மூன்றாவது தடவையாக சாம்பியனானது தென்னாபிரிக்கா

மூன்றாவது தடவையாக ரக்பி உலக சாம்பியனானது தென்னாபிரிக்கா

by Staff Writer 02-11-2019 | 6:17 PM
Colombo (News 1st) மூன்றாவது தடவையாகவும் ரக்பி உலக சாம்பியன் பட்டத்தை தென்னாபிரிக்கா சுவீகரித்தது. இதற்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 32-12 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாபிரிக்கா வீழ்த்தியது. கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி ஜப்பானில் ஆரம்பமான உலகக் கிண்ண ரக்பி தொடரில் 20 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டிக்கு தென் ஆபிரிக்காவும் இங்கிலாந்தும் தகுதி பெற்றதுடன், போட்டி யொகோஹோமா மைதானத்தில் இன்று நடைபெற்றது. போட்டியின் முதல் பகுதியில் 12- 6 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாபிரிக்கா வசமானது. இரண்டாம் பகுதியில் மேலும் ஆதிக்கம் செலுத்திய தென்னாபிரிக்கா 20 புள்ளிகளைக் கைப்பற்றியது. எனினும், இங்கிலாந்து அணியால் 6 புள்ளிகளை மாத்திரமே பெற முடிந்தது. அதன்படி 32-12 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாபிரிக்கா வெற்றியீட்டி உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. தென்னாபிரிக்கா பெற்ற 32 புள்ளிகளில் 2 ட்ரைகள், 2 கோல்கள், 6 பெனால்டிகள் என்பன அடங்கின. இங்கிலாந்து 4 பெனால்டிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்றது. தென்னாபிரிக்கா இதற்கு முன்னர் 1995 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ரக்பி உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.