MCC உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னரே பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: அமெரிக்க தூதரகம்

by Staff Writer 01-11-2019 | 7:24 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் MCC எனப்படும் Millennium Challenge Corporation நிறுவனம் 480 மில்லியன் டொலர் நிதியை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராகின்றமை தொடர்பில் தற்போது ஜனாதிபதி தேர்தல் அரங்கில் அதிகம் பேசப்படுகிறது. இந்த நிதியை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததாக அண்மையில் நிதி அமைச்சு தெரிவித்தது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகமும் இன்று இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. MCC நிறுவனம் பங்காளி நாடுகளில் நடைமுறைப்படுத்திய கொள்கைக்கு அமைய, நிதி உதவி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இலங்கை அரசாங்கம் பாராளுமன்ற அனுமதிக்காக அதனை சமர்ப்பிக்கும் என அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கைக்கு அரசாங்கத்தினதும் மக்களினதும் ஆதரவு உள்ளதை உறுதிப்படுத்துவதற்காக MCC நிறுவனத்திற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் தேவை என அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது. பரிசீலனை காலப்பகுதியில் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தவும் போக்குவரத்து மற்றும் காணி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி உதவி உடன்படிக்கை மூலம் 11 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு நேரடி அனுகூலம் கிடைக்கும் எனவும் பொருளாதார அபிவிருத்தி தர்க்கபூர்வமான வகையில் ஊக்குவிக்கப்படும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.