by Staff Writer 01-11-2019 | 9:54 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் தேசிய சுற்றாடல் பிரகடனம் கைச்சாத்திடப்பட்டு கொழும்பில் இன்று பகிரங்கப்படுத்தப்பட்டது.
புதிய சுற்றாடல் பிரகடனத்தில் சஜித் பிரேமதாச கையொப்பமிட்ட பின்னர் அது பகிரங்கப்படுத்தப்பட்டது.
சூழல் பாதுகாப்பு, வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் காடுகளில் மரங்களின் அடர்த்தியை அதிகரிப்பதற்கு முன்னுரிமை வழங்கும் திட்டத்திற்காக ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.
சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டும் வகையில், புவியியல் தொடர்பான பல்கலைக்கழகமொன்றை ஆரம்பித்து, அதன் ஊடாக வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற சூழலியல் செயற்பாடுகள் தொடர்பான கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றாடல் குழு, சூழல் அமைப்புக்கள் மற்றும் அந்த துறைகளுடன் தொடர்புடைய அனைவரையும் ஒன்றிணைத்து, நிலையான சுற்றாடல் மற்றும் வனஜீவராசி கொள்கையொன்றின் ஊடாக நிலையான பொருளாதார அபிவிருத்தி முறையொன்று பின்பற்றப்படவுள்ளது.
வனவிலங்கு பூங்கா, வன விலங்குகள், திமிங்கிலம் போன்ற விலங்குகளை பாதுகாத்தல், யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதலை குறைத்தல் மற்றும் பல்வகைத்துவக் கட்டமைப்பொன்றை சமூகத்தை மையமாகக் கொண்ட திட்டமாக பாதுகாப்பது ஆகிய விடயங்கள் தேசிய சுற்றாடல் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில் சூழலியல் மற்றும் வனஜீவராசிகள் ஆகிய துறைகளுடன் தொடர்புடைய நிபுணர்கள் உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.