17 கட்சிகள் இணைவு: பாரிய கூட்டணி ஒன்றை உருவாக்கியிருப்பதாக கோட்டாபய தெரிவிப்பு

17 கட்சிகள் இணைவு: பாரிய கூட்டணி ஒன்றை உருவாக்கியிருப்பதாக கோட்டாபய தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 Oct, 2019 | 7:32 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை உருவாக்குவதை நோக்காகக் கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கொழும்பு மன்றக் கல்லூரியில் கைச்சாத்திடப்பட்டது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான 17 கட்சிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றின.

1. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
2. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி
3. மஹஜன எச்கத் பெரமுன
4. ஶ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி
5. லங்கா சமசமாஜ கட்சி
6. ஜனநாயக இடதுசாரி முன்னணி
7. தேசிய சுதந்திர முன்னணி
8. பிவித்ரு ஹெல உறுமய
9. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
10. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
11. தேசிய காங்கிரஸ்
12. ஶ்ரீ லங்கா மஹஜன கட்சி
13. தேச விடுதலை மக்கள் கட்சி
14. தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டமைப்பு
15. எக்சத் மஹஜன கட்சி
16. விஜய தரணி தேசிய சபை
17. முற்போக்கு தமிழர் கட்சி

ஆகிய கட்சிகளே ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

கோட்டாபயவை வெற்றியடைச் செய்வதற்கு ஒன்றிணைந்து செயற்படல் மற்றும் எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் ஒன்றிணைந்து பயணித்தல் ஆகியன இந்த கூட்டமைப்பின் நோக்கமாகும்.

கூட்டமைப்பை உருவாக்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், ஒரே கொள்கையை ஏற்படுத்துவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, தெற்கு, வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய அனைத்து பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய கூட்டணியாக இதனைக் கருத முடியும் என குறிப்பிட்டார்.

நாட்டின் சுயாதீனம், ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், ஜனநாயகத்தை பாதுகாத்தல் மற்றும் உறுதிப்படுத்தல் ஆகிய சவால்கள் தமக்கு காணப்படுவதாகக் குறிப்பிட்ட கோட்டாபய ராஜபக்ஸ,
சட்டவாட்சியை உறுதிப்படுத்தல், மக்களை வாழ வைத்தல், வறுமையை ஒழித்து வளமான நாட்டைக் கட்டியெழுப்புதல் ஆகிய சவால்களுக்காகவே இன்று தாம் ஒன்றிணைந்துள்ளதாக குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்