வௌிநாட்டு உடன்படிக்கைகளை மீள பரிசீலிப்பதாக மகாநாயக்க தேரர்களிடம் சஜித் பிரேமதாச வாக்குறுதி

by Bella Dalima 31-10-2019 | 7:31 PM
Colombo (News 1st) வெளிநாடுகளுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் 16ஆம் திகதியின் பின்னர் மீள ஆராய்வதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்தார். தாம் எந்தவொரு வெளிநாட்டிற்காகவோ அல்லது ஏதேனும் ஒரு தரப்பிற்காகவோ முன்நிற்கும் ஒருவரல்ல எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, சியம் மகாநிக்காயவின் அஸ்கிரி பீட மகாநாயக்கரிடம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று கையளித்தார். இதன்போதே அவர் அனைத்து உடன்படிக்கைகளையும் மீள பரிசீலித்து, ஏதேனும் உடன்படிக்கை அல்லது சரத்து நாட்டிற்கு பாதகமானதாக அமைந்திருந்தால் அதனைத் திருத்துவதாக வாக்குறுதியளித்தார்.
ACSA உடன்படிக்கை எமது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதல்ல. அதற்கு முன்னர் இடம்பெற்றது. அந்த உடன்படிக்கை குறித்து பாரிய பிரச்சினையுள்ளது. 16ஆம் திகதி புதிய ஆரம்பமாகும். அந்த புதிய ஆரம்பத்தில், அந்த உடன்படிக்கைகளிலுள்ள விடயங்களைப் பின்பற்றுவதற்கு நான் தயாரில்லை. எந்த உடன்படிக்கையாயினும் அது நாட்டிற்கு சாதகமானதாக அமைந்தால் மாத்திரமே அதற்காக நான் முன்நிற்பேன். ஆகவே, கௌரவத்திற்குரிய மகா சங்கத்தினரும், நாட்டு மக்களும் குழப்பமடைவதற்கு காரணமேதுமில்லை
என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.