சஜித்தின் ஹெலிகொப்டரை தரையிறக்க இடையூறு

சஜித் பிரேமதாச பயணித்த ஹெலிகொப்டரை குருநாகலில் தரையிறக்க இடையூறு: தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

by Staff Writer 31-10-2019 | 10:24 PM
Colombo (News 1st) குருநாகலில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று (30) எதிர்பாராத நிலையை எதிர்நோக்கினார். சஜித் பிரேமதாச பயணித்த ஹெலிகொப்டரை தரையிறக்குவதில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம். சஜித் பிரேமதாச பயணித்த ஹெலிகொப்டரை திட்டமிட்டவாறு தரையிறக்க முடியாமையால் அதனை கட்டுநாயக்கவிற்கு திருப்பி அனுப்ப நேரிட்டது. சஜித் பிரேமதாச குறித்த இடத்திற்கு சென்றபோது குருநாகல் - நாவின்ன சந்தியில் கூட்டம் ஆரம்பமாகியிருந்தது. வீதிக்கு மின்விளக்கு பொருத்தாமையால், சஜித் பிரேமதாசவின் ஹெலிகொப்டரை தரையிறக்க முடியாது போனதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டார். ஹெலிகொப்டர் தம்புள்ளையிலிருந்து குருநாகல் வரை பிற்பகல் 6 தொடக்கம் 7 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் பயணித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.