சஜித்தின் சமூக புரட்சி: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை மட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம்

by Bella Dalima 31-10-2019 | 8:12 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று கண்டியில் மக்களிடம் முன்வைக்கப்பட்டது. இன்று காலை சஜித்தின் 'சமூக புரட்சி' என பெயர்சூட்டப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் கண்டியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வெளியிட்டு வைக்கப்பட்டது. மகா சங்கத்தினர், சர்வமத தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். முதலில் சர்வமதத் தலைவர்களிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பின்னர் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் அதனை சமர்ப்பித்தார். 20 முக்கிய விடயங்களை முன்னிறுத்தி சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்களிடம் முன்வைத்துள்ளார்.
  • சுமக்கக்கூடிய விலைகள்
  • சிறந்த வாழ்க்கைத்தரம்
  • அனைவருக்கும் நிழல்
  • அனைவருக்கும் உலகத் தரம்வாய்ந்த முன்பள்ளி கல்வி
  • உலக தரம்வாய்ந்த பல்கலைக்கழக கல்வி
  • உலக தரம்வாய்ந்த சுகாதார பாதுகாப்பு
  • பொறுப்புக்கூறும் தலைமைத்துவம்
  • போதைப் பொருள் மற்றும் ஊழலை சகித்துக் கொள்ளாத கொள்கை
  • மத கடும்போக்குவாதம்
  • வன்முறைக்கு எதிரான கொள்கை
  • வலுவான தேசிய பாதுகாப்பு மூலோபாயங்கள்
  • அரச துறைக்கான மரியாதை
  • மக்களின் அரசாங்கம்
  • நிதிச் சந்தை
  • மகளிரை ஊக்குவித்தல்
  • சிறு தொழில் முயற்சியாளர்களை பலப்படுத்தல்
  • விவசாயிகளை பலப்படுத்தல்
  • சுற்றாடல் மற்றும் எரிசக்தி, தொழில்முயற்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவித்தல்
  • தொழில் சந்தைக்கு தயாரான இளம் சந்ததி
  • புலம்பெயர் தொழிலாளர்களை கௌரவித்தல்
  • பொதுப்போக்குவரத்து
என்பன தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய இடம்பிடித்துள்ளன.
  • போதைப்பொருளுக்கு எதிரான யுத்தம்
  • போதைப்பொருளுக்கு எதிரான நீதிமன்றத்தை ஸ்தாபித்தல் மற்றும் தண்டனைகளை அதிகரித்தல்
  • எத்தனோல் இறக்குமதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை மீள ஸ்தாபித்தல்
  • இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டுவரப்படுவதை தடுத்தல்
என்பன தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நிதி தூய்தாக்கலை இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமாக அறிவிப்பதாகவும் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளார். மத கடும்போக்குவாதத்திற்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்து ஜனநாயக சமூகமொன்றை கட்டியெழுப்புவதாக அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு முதலிடம் எனும் தொனிப்பொருளிலேயே அவரது வெளிநாட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. புதிய அரசியலமைப்பொன்று தேவை எனவும் அது தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அனுமதி பெறப்படும் எனவும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிளவுபடாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள காணிப் பிரச்சினையை ஒரு வருடத்திற்குள் தீர்ப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படும் எனவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது. மகாவலி, வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் கீழுள்ள காணிகள் போருக்கு முன்னர் மக்களுக்கு சொந்தமாக இருந்திருந்தால் அவை மீள்குடியேறுவதற்காக விடுவிக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளார். நீண்டகால இடம்பெயர்வினால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்குடியேற்றம், வீடுகள் மற்றும் வர்க நிலையங்களின் மறுசீரமைப்பு தொடர்பிலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றஞ்சுமத்தப்படாமல் விசாரணைகளின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை முழுமையாக ஆதரிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரஜையும் இனம், மதம், வர்க்கம், சாதி அல்லது பாலினம் ஆகியவற்றைக் கருத்திற்கொள்ளாமல் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவார்கள் எனுவும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கையை நாட்டில் அமுல்படுத்துவதாகவும் மக்கள் அரச நிறுவனங்களில் தமது தாய்மொழிகளில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் மொழியையும் அதன் முக்கியத்துவத்தையும் வலுப்படுத்த சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாடொன்றை ஏற்பாடு செய்வதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நல்லிணக்கம் மற்றும் சக வாழ்விற்கான தேசிய கொள்கையை புதுப்பிக்கவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளார். பொறுப்புக்கூறும் தலைமைத்துவத்தின் கீழ் விளக்கமளித்துள்ள சஜித் பிரேமதாச, 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வை வரியற்ற சொகுசு வாகனங்களை வழங்கும் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வதாகக் கூறியுள்ளார். சர்வகட்சி குழுவின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளினதும் சிறப்புரிமைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் எனவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து மாகாணங்களிலும் விசேட பொருளாதார வலயமொன்றை ஸ்தாபிப்பதாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். செயற்றிட்டங்களுக்கு தேவையான நீண்டகால கடனை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக தேசிய அபிவிருத்தி வங்கியை ஆரம்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து தோட்ட தமிழ் குடும்பங்களும் தங்களது சொந்த நிலத்தில் 7 பேர்ச்சஸ் அறுதி நிலமாகவும் அந்த நிலத்தில் ஒரு வீட்டையும் வைத்திருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். நியாயமான சம்பளத்தை உறுதி செய்வதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார். பெருந்தோட்டப் பகுதிகளில் 10 தேசிய பாடசாலைகளையும் உயர் கல்விக்கான வாய்ப்பை மேம்படுத்த ஹைலேண்ட் பல்கலைக்கழகத்தையும் திறக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளார். அரச மற்றும் தனியார் துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லையை மூன்று வருடங்களால் அதிகரிக்கவும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. வாடகை வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் வேறு தொழில் பயிற்சிகளை பெறுவதற்காக மூன்று இலட்சம் ரூபா பிணையற்ற கடன் உதவியை வழங்கவும் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளார். ஒரு கிலோகிராம் நெல்லுக்கான நிர்ணய விலையாக 50 ரூபாவை அவர் அறிவித்துள்ளார். இலங்கையின் பலசரக்கு என பெயரிட்டு மீள் ஏற்றுமதி செய்யப்படுகின்ற மிளகு உள்ளிட்ட பலசரக்கு இறக்குமதியை தடை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளும் வருடாந்தம் இலவச மருத்துவ பரிசோதனையில் தோற்றுவதற்கான உரிமையை வழங்குவதாகவும் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளார். கர்ப்பிணித் தாய்மாருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 20,000 ரூபா கொடுப்பனவை 30,000 ரூபா வரை அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டாகும் போது வீட்டுரிமையுள்ள சமூகமொன்றை உருவாக்கும் சஜித் பிரேமதாசவின் அனைவருக்கும் நிழல் திட்டத்தின் கீழ் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டாகும் போது அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் எனவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது. தேசிய பட்டியலுக்கான ஒதுக்கீட்டில் 25 வீதத்தை பெண்களுக்காக வழங்கவும் பாராளுமன்றத்தில் 25 வீத பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் அதில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வறுமையை ஒழிப்பதற்காக சமுர்த்தி மற்றும் ஜனசவிய ஆகிய இரண்டு திட்டங்களிலும் உள்ள சிறந்த விடயங்களை கருத்திற்கொண்டு சமுர்த்தி கொடுப்பனவின் தொகையை அதிகரிக்கவும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.