தபால் மூல வாக்களிப்பு இன்று மற்றும் நாளை

தபால் மூல வாக்களிப்பு இன்று மற்றும் நாளை

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2019 | 6:59 am

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் அதிகாரிகள் இன்றும் நாளையும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் அடுத்த மாதம் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாட்களில் வாக்களிக்கத் தவறும் வாக்காளர்கள் எதிர்வரும் 7ஆம் திகதி, தாம் கடமையாற்றும் இடத்திற்கு அருகிலுள்ள மாவட்ட செயலகங்களில் தபால் மூலம் வாக்குகளை அளிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 6 இலட்சத்து 59 ஆயிரத்து 14 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்காளர்கள் தமது தபால் மூல வாக்காளர் அட்டையைப் பயன்படுத்த முன்னரோ அல்லது அதற்கு பின்னரோ புகைப்படம் எடுப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும், தபால் மூல வாக்களிப்பைக் கண்காணிக்க வேட்பாளர்கள் தமது பிரதிநிதி ஒருவரை வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்புக்காக நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்