கோட்டாபயவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை இடைநிறுத்தப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றில் அறிவிப்பு

கோட்டாபயவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை இடைநிறுத்தப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றில் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2019 | 6:06 pm

Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை அமுல்படுத்துவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டத்திற்கு முரணானதும் பக்கசார்பானதும் என சட்டத்தரணி நுவன் போப்பகே இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

லலித் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகிய சமூக செயற்பாட்டாளர்கள் இருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைக்கு சாட்சியம் வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பாணைக்கு தடை விதிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரண்டு வாரங்கள் மாத்திரமே அதிகாரம் காணப்படுவதாகவும் எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாக அமுலில் காணப்படும் இடைக்கால தடை உத்தரவானது சட்டத்திற்கு முரணானது எனவும் சட்டத்தரணி நுவன் போப்பகே மன்றுக்கு அறிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸவின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணியின் வாதங்களை மாத்திரம் பரிசீலித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளாது பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு பக்கசார்பானது என சட்டத்தரணி கூறியுள்ளார்.

உரிய முறையில் ஆராயாது மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் சட்டத்தரணி நுவன் போப்பகே மன்றுக்கு தௌிவுபடுத்தியுள்ளார்.

பாதுகாப்பு நிமித்தம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு கோட்டாபய ராஜபக்ஸவினால் ஆஜராக முடியாதுள்ளதாக அவருடைய சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டங்களில் கலந்துகொள்ள கோட்டாபய ராஜபக்ஸ சென்றிருந்ததாக சட்டத்தரணி நுவன் போப்பகே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் உயரிய பாதுகாப்பு இடமான நீதிமன்றத்திற்கு கோட்டாபய ராஜபக்ஸ ஆஜராக முடியாது என அவரின் சட்டத்தரணி கூறுவது புதுமைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அப்போதைய அரசாங்கம் மற்றும் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் அறிந்திருந்ததாகவும், அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சராகவும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளராகவும் செயற்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு அறிவித்திருந்ததாகவும் சட்டத்தரணி நுவன் போப்பகே குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சட்டத்தரணி நுவன் போப்பகேயின் கோரிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஸவின் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா ஆட்சேபனை தெரிவித்தார்.

இந்த ஆட்சேபனை தொடர்பில் எழுத்துமூலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி மன்றுக்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கும் நீதிபதி தீர்மானித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்