அமைதியாக நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு

அமைதியாக நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2019 | 10:05 pm

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமானது.

காலை 8.30 முதல் மாலை 4.15 வரை தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று வழங்கப்பட்டதுடன், நாளைய தினமும் வாக்களிக்க முடியும்.

இம்முறை தபால் மூல வாக்களிப்பிற்கு 6,59,514 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச உத்தியோகத்தர்களும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30-க்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4.15 க்கு நிறைவடைந்துள்ளது.

சுதந்திரமாகவும் அமைதியான முறையிலும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் கூறினர்.

பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் அடுத்த மாதம் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.

குறித்த நாட்களில் வாக்களிக்க தவறும் வாக்காளர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி தாம் கடமையாற்றும் இடத்திற்கு அருகிலுள்ள மாவட்ட செயலகங்களில் தபால் மூலம் வாக்குகளை அளிக்க முடியும்.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பை கண்காணிப்பதற்காக சுமார் 1000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தியுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக கஃபே அமைப்பு 200 உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியுள்ளது.

தபால் மூல வாக்களிப்பை கண்காணிப்பதற்காக 500 பேர் நடமாடும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்காக நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் காலப்பகுதியில், அரச நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் பிரசார நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்