யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு நெற்களஞ்சியசாலையை நிர்மாணித்துள்ளனர்: மஹிந்த ராஜபக்ஸ

by Bella Dalima 30-10-2019 | 10:05 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக்கூட்டங்கள் சிலவற்றில் இன்று கலந்துகொண்டிருந்தார். ரிகில்லகஸ்கட பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கலந்துகொண்டிருந்த போது, நாட்டின் பொது சொத்துக்களை அரசாங்கம் விற்பனை செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். ''ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து, கைகோர்த்து ஒன்றாக செயற்பட்டு முன்னோக்கி செல்கின்றோம். இரண்டினதும் வாக்குகளைக் கூட்டினால் 70 வீதமான வாக்குகள் கட்டாயமாகக் கிடைக்கும் என்பதை நினைவுபடுத்து விரும்புகின்றேன்'' என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். இதேவேளை, மஹிந்த ராஜக்ஸவின் தலைமையில் வலப்பனை - நில்தண்டாஹின்ன பகுதியில் மற்றுமொரு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விலைவாசி தொடர்பில் கருத்துக்கூறிய மஹிந்த ராஜபக்ஸ, தேர்தலின் போது தவறான முடிவினை மக்கள் எடுத்தமையே அதற்குக் காரணம் என சுட்டிக்காட்டினார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் உரமானியத்தை இல்லாது செய்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை. அத்துடன் அவர்கள் நிறுத்திக்கொள்ளவில்லை. ஒரு இலட்சம் வயல் நிலங்களில் பயிர் செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தினர். நெல் அதிகம் என்பதால் நெல்லை மத்தளை விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தினர். இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு நெற்களஞ்சியசாலையை நிர்மாணித்துள்ளனர். ஆனால், இந்த நாட்களில் அங்கே கடல் விமானத்தையே நிறுத்தி வைக்க முடியுமான அளவிற்கு நீர் நிரம்பியுள்ளது
என மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறினார்.