கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு

கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு

by Staff Writer 30-10-2019 | 11:57 AM
Colombo (News 1st) புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களை கடற்றொழில் நடவடிக்கைகளில் இருந்து தவிர்க்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வங்காள விரிகுடாவில் நிலவும் தாழமுக்கம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 8418 குடும்பங்களைச் சேர்ந்த 32 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 856 குடும்பங்களைச் சேர்ந்த 31 720 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் புத்தளம் மாவட்ட உதவி பணிப்பாளர் P.A.J. ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்காக மாவட்டத்தில் 19 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 1725 குடும்பங்களைச் சேர்ந்த 6775 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், புத்தளம் மாவட்டத்தில் 115 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 362 குடும்பங்களைச் சேர்ந்த 1240 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் புத்தளம் மாவட்ட உதவிப் பணிப்பாளர் P.A.J. ரொட்ரிகோ கூறியுள்ளார். அத்துடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின் முலடியன கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய வௌ்ளம் மற்றும் மண்சரிவு அபாயத்தை கருத்திற்கொண்டு தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர விடுத்த பணிப்புரைக்கமைய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.