பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

by Staff Writer 30-10-2019 | 8:22 AM
Colombo (News 1st) பிரித்தானியாவில் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. பொதுத்தேர்தல் கோரி பிரதமர் போரிஸ் ஜோன்ஸனினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு பிரித்தானிய பொதுமக்கள் சபையில் வெற்றியடைந்துள்ளது. 438 - 20 என்ற மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலுக்கான ஆதரவு தெரிவிக்கும் சட்டமூலம் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ​இருப்பினும், இந்தச் சட்டமூலத்திற்கு பிரித்தானிய பிரபுக்கள் சபை அனுமதியளிக்க வேண்டியுள்ளதுடன், இவ்வார இறுதியில் அது சட்டமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்தல் கோரும் சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாகும் பட்சத்தில், வாக்கெடுப்பு நாள் வரையான 5 வாரங்கள் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும். நாட்டினதும் பிரெக்ஸிட்டினதும் எதிர்காலம் கருதி, பொதுமக்கள் தமக்கான ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். 5 வருடங்களுக்குள் பிரித்தானியாவில் நடத்தப்படும் 3ஆவது தேர்தலாக இது அமைந்துள்ளது. அத்துடன், 1923 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டிசம்பரில் தேர்தல் இடம்பெறவுள்ளமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.