தபால் மூல வாக்களிப்பை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

தபால் மூல வாக்களிப்பை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2019 | 2:00 pm

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்பு நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இடம்பெறவுள்ளது.

இதற்கான தபால் வாக்குச்சீட்டு உள்ளிட்ட பாதுகாப்புப் பொதி வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தௌிவுபடுத்தியுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பொலிஸ் நடமாடும் சேவைகள், பொலிஸ் மோட்டார்சைக்கிள் ரோந்து நடவடிக்கை, வீதியோர ரோந்து நடவடிக்கையினூடாக அந்தந்த பொலிஸ் பிரிவுகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் அரச நிறுவனங்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கி, சட்டத்தை அமுல்படுத்தி அமைதியை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இதேநேரம், நாளை மற்றும் நாளை மறுதினங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் அரச நிறுவனங்களை அண்மித்த 500 மீற்றர் எல்லைக்குள் துண்டுப்பிரசுரங்களைப் பகிர்ந்தளித்தல், ஒன்றுகூடுதல் உள்ளிட்ட பிரசார நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், 500 மீற்றர் எல்லைக்குள் சட்டரீதியான அனுமதி பெறப்பட்ட கட்சி அலுவலகங்கள் காணப்படுமாயின் குறித்த கட்சி அலுவலகத்தில் கட்அவுட்களை தொடர்ந்தும் பேண மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்