இலங்கைக்கு எதிரான 2 ஆவது T20: தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

இலங்கைக்கு எதிரான 2 ஆவது T20: தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

இலங்கைக்கு எதிரான 2 ஆவது T20: தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Bella Dalima

30 Oct, 2019 | 7:30 pm

Colombo (News 1st) இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலியா 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் சர்வதேச இருபதுக்கு 20 தொடரை ஒரு போட்டி எஞ்சிய நிலையில் அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், தொடரைத் தக்கவைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பில் இலங்கை அணி இரண்டாவது போட்டியில் இன்று களமிறங்கியது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 117 ஓட்டங்களையே பெற முடிந்தது.

குசல் ஜனித் பெரேரா பெற்ற 27 ஓட்டங்களே அணி சார்பில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

பந்துவீச்சில் பில்லி ஸ்டேன் லேக், பெட் கமின்ஸ், அற்டன் அகார், அடம் ஷம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

வெற்றி இலக்கான 118 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலியா முதல் ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அணித்தலைவர் ஏரோன் பிஞ்ச் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

எனினும், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஜோடி அதிரடித் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றது.

டேவிட் வார்னர் 60 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 53 ஓட்டங்களையும் பெற, அவுஸ்திரேலியா 13 ஓவர்களில் வெற்றியை அடைந்தது.

இதற்கமைய, 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் 2 – 0 எனும் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

இது அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கை அணி அடைந்த முதல் சர்வதேச இருபதுக்கு 20 தொடர் தோல்வியாகும்.

இதற்கு முன்னர் 2010, 2013, 2017 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 தொடர்களில் இலங்கை வெற்றி பெற்றது.

மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச இருபதுக்கு 20 போட்டி நாளை மறுதினம் (01) மெல்பேர்னில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்