MCC நிறுவனத்திடமிருந்து 480 மில்லியன் டொலர் நிதியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி

by Staff Writer 29-10-2019 | 10:19 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் Millennium Challenge Corporation நிறுவனம் இலங்கைக்கு வழங்கும் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். கொழும்பில் வாகன போக்குவரத்து முகாமைத்துவம், நாடளாவிய ரீதியில் வீதி நிர்மாணம் மற்றும் அபிவிருத்தி, முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையிலான காணி நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்துவது ஆகிய திட்டங்கள் இந்த நிதியின் மூலம் செயற்படுத்தப்படவுள்ளன. Millennium Challenge Corporation நிறுவனத்துடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னரும் இலங்கையின் தேவைக்கேற்ப குறித்த திட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான இயலுமை இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவிடமிருந்து இவ்வாறு நிதியைப் பெற்றுக்கொள்ளும் 37 ஆவது நாடு இலங்கை என்பதுடன், 2020 ஆம் ஆண்டு இந்த உடன்படிக்கை அமுலுக்கு வரவுள்ளது.