உயிர்ப் போராட்டத்தின் பின் சுஜித் சடலமாக மீட்பு

பல மணிநேர போராட்டத்தின் பின் சுஜித் சடலமாக மீட்கப்பட்டான்

by Staff Writer 29-10-2019 | 7:02 AM
Colombo (News 1st) இந்தியாவின் - திருச்சி மணப்பாறை பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுஜித்தின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணற்றில் 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித்தின் உடல் இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து குழந்தையின் உடலை மீட்டுள்ளனர். குழந்தை சுஜித்தின் உடல் அழுகி துர்நாற்றம் வீசிய நிலையில் காணப்பட்டதால், இரண்டு பாகங்களாகவே மீட்க முடிந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட சடலம் பொலித்தீன் உறையில் சுற்றி மணப்பாறை அரச வைத்தியசாலைக்கு அதிகாலை 5 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் மீண்டும் நடுக்காட்டுப்பட்டிக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. சுஜித்தின் உடலுக்கு தமிழக அமைச்சர்களான விஜயபாஸ்கர், உதயகுமார், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சுஜித்தின் உயிரிழப்புத் தொடர்பான முழுமையான விபரம் வௌியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், சுஜித் உயிரிழந்தமை தொடர்பில் பெற்றோருக்கு முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. சுஜித்தை உயிருடன் மீட்பதற்கு பல மணி நேர முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பல்வேறு தரப்பினரும் இணைந்து 82 மணித்தியாலங்கள் மீட்புப் பணி நடைபெற்றிருந்தது. இதற்கு முன்னர் நேற்றிரவு 10 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டு, ஆய்வு செய்ததில் குழந்தை உயிரிழந்தமை கண்டறியப்பட்டுள்ளது. சுஜித் உயிரிழந்தமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று அதிகாலை 2.30 மணிக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ஜே. இராதாகிருஷ்ணனால் வௌியிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற 12 சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இது 13 ஆவது சம்பவமாக அமைந்துள்ளது. இதனிடையே நடுக்காட்டுப்பட்டியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை சுஜித்தின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, சுஜித் விழுந்து உயிரிழந்த ஆழ்துளைக் கிணற்றையும் அவனை மீட்பதற்காக அமைக்கப்பட்ட குழியையும் கொங்கிரீட் கலவை கொண்டு மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.