விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க எண்ணியுள்ளோம்: கோட்டாபய ராஜபக்ஸ

by Bella Dalima 29-10-2019 | 9:39 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, மொனராகலை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவின் மகனான உதார விஜயமுனியும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இப்பொதுக்கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஸ பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
தொழில்நுட்பத்தை விவசாயிகளிடம் கொண்டு செல்வதற்காக நாம் பாரிய முதலீடுகளை செய்வோம். அத்துடன், விவசாய காப்புறுதி, விவசாயிகளுக்கான ஓய்வூதியம் ஆகியவற்றை எமது காலப்பகுதிக்குள் வழங்குவதற்கு நாம் எண்ணியுள்ளோம். இந்த பிரதேசங்களில் மிளகு பயிரிடும் அதிகளவிலானோர் உள்ளமையை நாம் அறிவோம். எனினும், வெளிநாடுகளில் இருந்து தரம் குறைந்த மிளகை இறக்குமதி செய்து, எமது நாட்டின் பெயரை அச்சிட்டு மீள் ஏற்றுமதி செய்ததன் ஊடாக எமது சந்தை வாய்ப்புக்கள் இல்லாமற்போயின. எமது நாட்டிற்கு தரமற்ற பயிர்களை இறக்குமதி செய்வதை நாம் தடுப்போம். அத்துடன், வெளிநாடுகளில் இருந்து இறப்பர் இறக்குமதி செய்வதால், தற்போது இறப்பர் பால் சேகரிக்கப்படுவதில்லை. எனினும், இறப்பர் ஊடாக சிறந்த வருமானத்தை ஈட்ட முடியும். விவசாயம் தொடர்பில் கவனம் செலுத்தாமையே இந்த நிலைக்கு காரணம்.