நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை

by Staff Writer 29-10-2019 | 7:38 AM
Colombo (News 1st) கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் (29) 100 முதல் 150 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம், ஏனைய சில மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், மழையுடனான வானிலையால் புத்தளம் மாவட்டமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற வானிலையால் புத்தளம் மாவட்டத்தில் 8257 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பொலன்னறுவை மெதிரிகிரிய பகுதியை ஊடறுத்து வீசிய காற்றின் காரணமாக 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பலத்த மழைவீழ்ச்சியினால் தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகளும் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் கென்யோன் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களும் குறித்த நீர்த்தேக்கங்களைப் பயன்படுத்தும் மக்களும் அவதானமாக செயற்பட வேண்டும் என இடர்முகாமைத்துவ நிலையம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை, கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு ஒருநாள் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் சிறு மீன்பிடியாளர்களுக்கும் கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வங்காள விரிகுடாவில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களும் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.