சமையல் எரிவாயுவை அதிக விலையில் விற்பவர்கள் கைது 

சமையல் எரிவாயு அதிக விலையில் விற்பனை: வர்த்தகர்களைக் கைது செய்ய நடவடிக்கை

by Staff Writer 29-10-2019 | 2:00 PM
Colombo (News 1st) சந்தைகளில் அதிக விலைக்கு சமையல் எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிக விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்த பல வர்த்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சமையல் எரிவாயு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுமாயின், அது குறித்து தமது சபைக்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க, மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன் பிரகாரம் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சந்தைகளில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்தநிலையில், தற்போது 4000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தமது நிறுவனத்தின் கையிருப்பிலுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் வர்த்தகப் பணிப்பாளர் ஜனக பத்திரத்ன கூறியுள்ளார். அத்துடன், மேலும் 4000 சிலிண்டர்களை விரைவில் இறக்குமதி செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனத் தலைவர் W.K.H. வேகபிட்டிய கூறியுள்ளார்.