அனைத்து பாடசாலைகளிலும் மருத்துவப் பிரிவுகளை உருவாக்குவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி

by Bella Dalima 29-10-2019 | 9:16 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் இன்று பங்கேற்றிருந்தார். கம்பஹா - திவுலப்பிட்டிய நகரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று, சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கினர். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச,
இந்நாட்டின் பெண்களுக்காக நான் எடுத்த முன்னேற்றகரமான தீர்மானம் தொடர்பில் எதிர்த்தரப்பினர் என் மீது தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். உலகிற்கு சக்தியை வழங்கும் பெண்கள், இன்று பாரிய பிரச்சினையொன்றை எதிர்நோக்கியுள்ளனர். மாதவிடாய் காலப்பகுதியில் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத காரணத்தினால், சுகாதார ரீதியில் அபாயகரமான பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற நோய்களுக்குள்ளாகியுள்ளனர். 70 வீதமான பெண்கள் இந்த பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் உரிய சுகாதார நடைமுறைகளை 30 வீதமானோரே பின்பற்றுகின்றனர். இதனை மௌனமாக நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. யார் கேலி செய்த போதிலும், இவ்வகையான சுகாதார வசதிகளற்ற அனைத்து பெண்களுக்கும் இலவசமாக இந்த வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க எதிர்கால அரசாங்கம் என்ற ரீதியில் நாம் செயற்படுவோம் என்பதை தௌிவாகக் கூறிக்கொள்கின்றேன். அத்துடன், சிறுமிகள் கல்வி கற்கும் அனைத்து பாடசாலைகளிலும் மருத்துவப் பிரிவுகளை உருவாக்குவேன்.
என வாக்குறுதியளித்தார். இதேவேளை, பியகம பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் சஜித் பிரேமதாச இன்று மாலை கலந்துகொண்டிருந்தார். இதன்போது, தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சஜித் பிரேமதாச மீண்டும் சவால் விடுத்தார்.