குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம்; பெருந்திரளானோர் அஞ்சலி

குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம்; பெருந்திரளானோர் அஞ்சலி

குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம்; பெருந்திரளானோர் அஞ்சலி

எழுத்தாளர் Bella Dalima

29 Oct, 2019 | 3:42 pm

Colombo (News 1st) திருச்சி – மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல் பாத்திமா புதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் திகதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் நான்கு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. மீட்புக் குழுவினரின் பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதனால் அருகில் மற்றொரு பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கியதும் பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் தொடங்கின. ஆனால், கடினமான பாறைகள் இருந்ததால் குழி தோண்டுவதற்கு மிகவும் காலதாமதம் ஆனது.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் நேற்று இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை உயிரிழந்த‌தாகவும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், ஆழ்துளை கிணற்றில் 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது.

பிரேத பரிசோதனை முடிந்து சுஜித் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து இன்று காலை கரட்டுப்பட்டி அருகே பாத்திமா புதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

இறுதிச் சடங்கில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, குழந்தைக்கு அஞ்சலி செலுத்தினர்.

சுஜித்தின் மரணத்திற்கு காரணமான ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவை கொண்டு தற்போது மூடப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிக்காக அருகில் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறும் மூடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்