சிலியில் 10 இலட்சம் பேர் போராட்டம்

பொருளாதார சீர்திருத்தங்களைக் கண்டித்து சிலியில் 10 இலட்சம் பேர் போராட்டம்

by Bella Dalima 26-10-2019 | 4:35 PM
Colombo (News 1st) சிலி நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்களைக் கண்டித்தும், அந்நாட்டு பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் இலட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக போராட்டங்கள் இடம்பெறுகின்றன. அரசின் நிர்வாகத்தில் உள்ள பொது போக்குவரத்து கட்டணங்கள் பலமடங்காக உயர்த்தப்பட்டன. மேலும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம், மருத்துவமனை கட்டணங்கள் ஆகியவற்றிலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த கட்டண உயர்வு மற்றும் சீர்திருத்தங்களை கண்டித்து சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோ உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை தாக்கி சூறையாடினர். போராட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் வெடித்த மோதலில் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து, சிலி நாட்டில் அவரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பிரதமர் செபாஸ்டின் பினேரா பதவி விலக வேண்டும் என 10 இலட்சத்திற்கும் மேலான மக்கள் போராட்டம் நடத்தினர். தலைநகர் சாண்டியாகோவில் உள்ள டவுன் ஹாலில் பொருளாதார சீர்திருத்தங்களைக் கண்டித்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 8 இலட்சத்து 20 ஆயிரம் பேர் பேரணி நடத்தினர். இது குறித்து சிலி ஆளுநர், வரலாற்று முக்கியத்துவமிக்க தினம், அமைதியான பேரணி, புதிய சிலி உருவாவதற்கான கனவை இது பிரதிபலிக்கிறது, என தெரிவித்துள்ளார்.