போதியளவு தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றன

தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றன; திறமையானவர்களைத் தான் உருவாக்க வேண்டும் என்கிறார் கோட்டாபய

by Bella Dalima 26-10-2019 | 7:21 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, பதுளையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டிருந்தார். தியத்தலாவ நகரில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஸ, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களின் ஊடாக விவசாயிகளின் உற்பத்திகளைப் பெற்று, அதன் ஊடாக புதிய உற்பத்திகளை செய்து அவர்களின் வருமானத்தை உயர்த்த முடியும் என குறிப்பிட்டார். சீனா, இந்தியா மற்றும் மேற்கத்தேய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பயணிக்கின்றனர். இவர்களுள் ஒரு தொகுதியினரை இலங்கைக்கு வரவழைப்பதற்கான தலையீட்டை அரசாங்கம் செய்ய வேண்டும் எனவும் கோட்டாபய ராஜபக்ஸ கூறினார். கோட்டாபய ராஜபக்ஸ பங்கேற்ற மற்றுமொரு பொதுக்கூட்டம் ஹாலிஎல நகரில் நடைபெற்றது. இதன்போது, 'பொறுப்பற்ற திட்டங்களின் ஊடாக உலகில் தரம் குறைந்த தேயிலையை நாட்டிற்கு கொண்டு வந்து, எமது தேயிலையுடன் கலந்து வௌிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக, உலக சந்தையில் எமது தேயிலைக்கான விலை வீழ்ச்சியடைந்துள்ளது,' என தெரிவித்தார். சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களைப் போன்று, தேயிலை தொழிற்துறையையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பண்டாரவளை நகரில் நேற்று (25) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஸ பங்கேற்றிருந்தார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
ஆசியாவின் பொருளாதாரம் தொடர்பில் அவதானிக்கும் போது தேவையானளவு தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனினும், அந்த தொழில்களுக்கு தேவையான திறமையுள்ள இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும். கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களை தொழில்நுட்ப துறைசார் தொழில்களில் ஈடுபடுத்த முடியும். ஒரு பில்லியன் டொலர் அந்நிய செலாவணியை நாம் தற்போது பெற்றுக்கொள்கின்றோம். எனினும், இதனை 3 பில்லியன் வரை எம்மால் இலகுவாக அதிகரிக்க முடியும். அவ்வாறு அதிகரிப்பதற்கு திறமையுள்ள 3 இலட்சம் ஊழியர்கள் அவசியம். மூன்று இலட்சம் பேருக்கு எம்மால் இலகுவாக பயிற்சியளிக்க முடியும். இவ்வாறு செயற்பாட்டு ரீதியில் முன்னெடுக்கக்கூடிய திட்டமொன்றை நாம் முன்வைத்துள்ளோம்.
என குறிப்பிட்டார்.