அரசியல் பிரசாரங்களில் பெயரை பயன்படுத்த வேண்டாம்  

தமது பெயரை அரசியல் பிரசாரங்களில் பயன்படுத்த வேண்டாம் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிக்கை

by Staff Writer 26-10-2019 | 6:14 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிக்கை விடுத்துள்ளது. தாம் எந்த ஒரு கட்சிக்கோ , எந்தவொரு வேட்பாளருக்கோ ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயற்படுவதில்லை எனவும், தமது பெயரை பயன்படுத்தி அரசியல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஊடக அறிக்கையின் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. தாம் விரும்பும் வேட்பாளரை ஆதரிப்பது ஒருவரது உரிமை எனவும் தேசத்தின் குடிமக்களாகிய முஸ்லிம்கள் தங்களின் வாக்குகளை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வாக்களிப்பதில் அசிரத்தையுடன் நடந்துகொள்ள வேண்டாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டை நேசிக்கின்ற , குடிமக்களின் நலன்களுக்காக உழைக்கின்ற, நாட்டை கட்டியெழுப்பும் வல்லமை கொண்டவருக்கே வாக்களிக்க வேண்டும் என உலமா சபை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேடைகளில் எந்த ஒரு வேட்பாளருக்கோ அரசியல் கட்சி சார்பாகவோ அல்லது எதிராகவோ பேசுவதனை முற்றாக தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் பள்ளிவாசல்களில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கக்கூடாது எனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.