அரசியல் முதிர்ச்சி இல்லாமல் இருப்பதே பெரிய தகுதி

அரசியல் முதிர்ச்சி இல்லாமல் இருப்பதே எமக்குள்ள பெரிய தகுதி: ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க

by Bella Dalima 26-10-2019 | 8:46 PM
Colombo (News 1st) தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நேற்று (25) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கினார். இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்கவிற்கும் அவரது கட்சியில் உள்ளவர்களுக்கும் அரசியல் முதிர்ச்சி இல்லை என கூறப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மகேஷ் சேனாநாயக்க, அரசியல் முதிர்ச்சி இல்லாமல் இருப்பதே தமக்குள்ள பெரிய தகுதி என எண்ணுவதாகக் குறிப்பிட்டார்.
இதுவரை காலமும் அரசியலில் ஈடுபட்டிருந்த குடும்பங்கள் மற்றும் அரசியல்வாதிகள் நாட்டை அழித்துள்ளனர். அவர்கள் எவரையும் இணைத்துக்கொள்ளாது, புதிதாக ஆரம்பித்தமை சிறந்ததாகும். வாக்களித்தமையே எனக்கிருக்கும் அரசியல் அனுபவமாகும். இந்த முறையிலேயே இம்முறை செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் என நான் தீர்மானித்தேன். எனது கட்சி உறுப்பினர்களின் திறமைகளை தேர்தல் செயற்பாடுகளில் நான் பயன்படுத்துவேன். தொழில் வல்லுனர்கள், பேராசிரியர்கள், வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளனர். இந்த நாட்டிற்கு அவர்கள் பாரிய பலமாக இருப்பார்கள். அரசியல்வாதிகள் இந்த நாட்டை நிர்வகிக்கக்கூடாது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச ஊழியர்களே நாட்டை நிர்வகிக்க வேண்டும்
என மகேஷ் சேனாநாயக்க மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, மகேஷ் சேனாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலக மாட்டார் என தேசிய மக்கள் கட்சி அறிக்கையொன்றை வௌியிட்டு இன்று அறிவித்திருந்தது.